திண்டிவனம் அருகே பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்த ஆம்னி பஸ்; 18 பேர் காயம்
திண்டிவனம் அருகே பயணிகள் நிழற்குடைக்குள் ஆம்னி பஸ் புகுந்ததில், 18 பேர் காயமடைந்தனர்.
திண்டிவனம்,
சென்னையிலிருந்து மதுரை நோக்கி நேற்று தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை தூத்துக்குடி மாவட்டம் ஆழிக்குடி அடுத்த அந்தோணி முத்து மகன் சின்னதுரை (வயது 45) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக சென்னையை சேர்ந்த அக்பர் மகன் அசேன் (45) என்பவர் உடனிருந்தார். பஸ்சில் விழுப்புரத்தை சேர்ந்த 7 பயணிகள் உள்பட 3 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சலவாதி என்கிற கிராமத்துக்கு அருகே வந்த போது, பஸ்சுக்கு முன்பு சென்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென இடது புறமாக திரும்பியது.
18 பேர் காயம்
இதனால் காரின் மீது மோதாமல் இருக்க சின்னத்துரை பஸ்சை இடதுபுறம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்து நின்றது. இதில் அங்கு அமர்ந்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர்.
மேலும் பஸ்சில் வந்த பயணிகள், டிரைவர் உள்பட 12 பேரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.