தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 81 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.
குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சனை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 81 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மனுக்கள் மீது உடனடி தீர்வு
போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் பெறப்பட்ட 81 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. வாரந்தோறும் நடைபெற்று வரும் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப பிரச்சினை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான புகார் மனுக்களை அதிகம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா அரசு விடுமுறை என்றாலும், காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், அன்பழகன், லதா உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.