விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு உயர்வு!
விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது பஸ்பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடி மகிழும் வழக்கத்தை பெரும்பாலானோர் இன்றளவும் பின்பற்றுகின்றனர். இதற்கான பண்டிகை காலத்துக்கு முந்தைய நாட்களில் சொந்த ஊர்களில் இருக்கும் வகையில் பயணப்பட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனை பயன்படுத்தி வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் ஒவ்வொரு முறையும் தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகை காலத்தில் இதேபோல் கட்டணம் உயர்ந்திருந்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக (25-ந்தேதி) சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளை குறிவைத்து ஆம்னி பஸ்களின் கட்டணம் 'கிடுகிடு'வென உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு சுமார் ரூ.700 முதல் ₹1000 என்ற வழக்கமான கட்டணம், ஜனவரி 1ம் தேதி ரூ2,900 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.1300 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ம் தேதி ரூ.3000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னை திரும்ப சுமார் ரூ.2400-2700 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ல் ரூ3,500 முதல் ரூ.4,500 வரை உயர்தப்பட்டுள்ளது. சென்னை திரும்ப முன்பதிவு செய்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்னி பஸ் உரிமையாளர்களை பொறுத்தவரையில், 'இதுதான் எங்களுடைய வழக்கமான கட்டணம், மற்ற நாட்களில் நாங்கள் நஷ்டத்தில்தான் பஸ்களை இயக்குகிறோம்' என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.