தர்மபுரி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி பானை, கரும்பு- மஞ்சள் குலை விற்பனை படுஜோர்-பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்


தர்மபுரி பகுதியில் பொங்கல் பண்டிகையொட்டி பானை, கரும்பு மற்றும் மஞ்சள் குலை விற்பனை படு ஜோராக நடைபெற்றது. கடைவீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்.

தர்மபுரி

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று போகிப்பண்டிகையுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளை தூய்மை செய்து வீட்டின் வாசலில் காப்பு கட்டினர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரியன் பொங்கல் விழாவாகவும், நாளை (திங்கட்கிழமை) மாட்டுப்பொங்கல் விழாவாகவும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கல் விழாவாகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா வைரஸ் தொற்றால் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு தொற்று குறைந்த நிலையில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தர்மபுரி பகுதியில் பானை, கரும்பு, மஞ்சள் குலை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. இதனை வாங்க பொதுமக்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கடைவீதிகளில் குவிந்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் நேற்று பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது. தர்மபுரி பகுதியிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

பானைகள் விற்பனை

தர்மபுரி பெரியார் சிலை அருகில், சந்தைப்பேட்டை அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி பழைய தர்மபுரி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பானை விற்பனை மும்முரமாக இருந்தது. அளவுக்கு ஏற்றார் போல் ரூ.50 முதல் ரூ.1000 மதிப்புள்ள பானைகள் மற்றும் விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்ட பானைகளை வாங்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள் ஏராளமானோர் மினி லாரிகளில் வந்து பானைகளை வாங்கி சென்றனர்.

பொங்கல் பண்டிகையில் முக்கிய அங்கம் வகிக்கும் செங்கரும்பு விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. தர்மபுரி சந்தைப்பேட்டை, பெரியார் சிலை, கடைவீதி, பென்னாகரம் ரோடு, புரோக்கர் ஆபீஸ் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு ரகத்துக்கு ஏற்றவாறு ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையானது.

இதேபோன்று பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜையில் முக்கிய அங்கம் வகிக்கும் மஞ்சள் குலை விற்பனையும் சூடு பிடித்தது. ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.45-க்கு விற்பனையானது.

பூஜை பொருட்கள்

பொங்கல் படையலுக்கு தேவையான சர்க்கரை பூசணி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தர்மபுரி மார்க்கெட் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ.25 வரை விற்பனையானது.

இதேபோன்று தர்மபுரி கடை வீதியில் வெல்லம், பச்சரிசி, முந்திரி-திராட்சை, தேங்காய், வாழைப்பழம், வாழை இலை, கற்பூரம், ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது. இதனால் அந்தப் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதேபோல் மாவட்டத்தின் முக்கிய ஊர்களான அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, நல்லம்பள்ளி, ஏரியூர், மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடித்ததால் அனைத்து வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story