பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் மோதியதில் பஸ் கவிழ்ந்தது
நெல்லையில் பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் பஸ் மோதி கவிழ்ந்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து நேற்று முன்தினம் இரவில் கன்னியாகுமரிக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நேற்று அதிகாலையில் நெல்லை தாழையூத்தை கடந்து நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்குள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகில் வந்தபோது, அதன்பின்னால் நெய்வேலியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மற்றொரு அரசு விரைவு பஸ் வந்தது. அந்த பஸ் ஊட்டி பஸ்சை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஊட்டி பஸ்சின் பின்பக்கத்தில் மோதியது.
இதில் ஊட்டி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்புச்சுவர் மீது மோதி, அருகில் உள்ள தனியார் பள்ளிக்கூட சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கவிழ்ந்தது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுமார் 5 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தில் நெய்வேலி பஸ்சின் முன்பக்கம் சேதம் அடைந்தது.
கிரேன் மூலம் மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகளை மாற்று பஸ் மூலம் நெல்லை, கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின்போது பஸ், அங்குள்ள மின்கம்பத்தின் மீதும் மோதியதால் மின்கம்பம் முறிந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, மின்கம்பத்தை சரிசெய்து மின்வினியோகத்தை சீரமைத்தனர்.