பொள்ளாச்சி, கோவை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க கோரி போராட்டம்-ஆலோசனை கூட்டத்தில் முடிவு
பொள்ளாச்சி, கோவை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க கோரி போராட்டம் நடத்த உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, கோவை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க கோரி போராட்டம் நடத்த உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி சேலம், மதுரை, பாலக்காடு கோட்ட தெற்கு ரெயில்வை பொள்ளாச்சி, கோவை புறக்கணிப்பதை கண்டித்து பொள்ளாச்சி சதுரங்க சங்கம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் நலச்சங்கம் இணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பரமேஸ்வரன், நாகராசன், நாகமாணிக்கம், கிருஷ்ண பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சி வழியாக செல்லும் பாலக்காடு-ராமேசுவரம் பயணிகள் ரெயில், கோவை-மதுரை பயணிகள் ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று கோவையில் இருந்து ஈரோடு, சேலம் பயணிகள் ரெயிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் கூடுதலாக ரெயில்கள், பஸ்களை இயக்குவது என்பது அரசு பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க எடுக்க கூடிய நடவடிக்கை ஆகும். மாறாக ரெயில்வே துறை குறிப்பாக இந்த கோவை பகுதியில் பொள்ளாச்சியை புறக்கணிக்கும் பணியை செய்து வருகிறது. வடமாநிலங்களுக்கு ஒரு நீதி. தென்மாநிலங்களுக்கு ஒரு நீதி என்பதை தான் மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
மக்களை திரட்டி போராட்டம்
நீண்டகால போராட்டத்துக்கு பிறகு பொள்ளாச்சி-கோவை அகலரெயில் பாதை திட்டம் மின் மயமாக்கப்பட்டு இருக்கிற சூழ்நிலையில் பயணிகள் ரெயிலை கூடுதலாக இயக்கினால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பயன்பாடாக இருக்கும். பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. தென் மாவட்டங்களை இணைக்க கூடிய மிக முக்கியமான இடமாக பொள்ளாச்சி இருக்கிறது. கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக ரெயில் இயக்க வேண்டும். வர்த்தக ரீதியாக வளர்ந்து வரும் பொள்ளாச்சி நகரில் ரெயில்களை நிறுத்தப்பட்டு இருப்பதும், வடமாநிலங்களுக்கும், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்படாதது என்பது பொள்ளாச்சியின் வளர்ச்சியை புறக்கணிக்கும் எண்ணமாக பார்க்கிறோம்.
பொள்ளாச்சி அரிமா சங்கம், ரெயில் பயணிகள் சங்கம் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். பண்டிகை காலங்களில் மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கூடுதலாக ரெயில்களை இயக்க வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக சென்னைக்கும், வடமாநிலங்களுக்கும் ரெயில்களை இயக்க ரெயில் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏற்ப பொள்ளாச்சியில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களை ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக எம்.பி. மூலம் கோரிக்கை விடுக்கப்படும். கோரிக்கை உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும், அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.