ஒணம் பண்டிகை: மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நெல்லை,
கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் ஒணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மகாபலி மன்னனை மலர்களால் வரவேற்கும் அனைத்து மலையாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எத்தனை கதைகள் புனைந்தாலும் சன்மார்க்க அரசனை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது..! கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள்... ஓணம் பண்டிகை புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிப்பதாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இது திராவிடர்களுக்கு இடையே உள்ள ஆழமான தொடர்பை காட்டுகிறது. கருத்து வேறுபாடுகளை கலைந்து உறவை வலுப்படுத்துவோம்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.