பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவு.. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவு.. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Sep 2023 11:30 AM GMT (Updated: 7 Sep 2023 12:25 PM GMT)

பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவாக இருந்ததால், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

திருவள்ளூர்

1 பிஸ்கெட் குறைவு

சென்னை மணலி மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாய்களுக்கு போடுவதற்காக ஒரு கடையில் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார். அவர் பிஸ்கெட் பாக்கெட்டை திறந்து பார்த்தபோது அதில் 15 பிஸ்கட் இருந்தன. ஆனால் அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் 16 பிஸ்கட்டுகள் இருப்பதாக அச்சிடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டில்லிபாபு கடைக்காரரிடம் பிஸ்கட் பாக்கெட்டின் கவரில் 16 பிஸ்கெட் என்று உள்ளது ஆனால் கவரின் உள்ளே 15 பிஸ்கெட் தான் இருக்கிறது எனக் கூறியுள்ளார். அத்துடன் பிஸ்கெட் நிறுவனத்திடமும் அவர் இதுகுறித்து விசாரித்துள்ளார். அந்த நிறுவனம் அவருக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரூ.29 லட்சம் மோசடி என வழக்கு

இதனால் அதிருப்தியடைந்த டில்லிபாபு இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் குறிப்பிட்ட அந்த பிஸ்கட் நிறுவனம் சுமார் ரூ.50 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்வதாகவும், ஒரு பிஸ்கெட்டின் விலை 75 பைசா என்று கணக்கிடும் பொழுது 15 பிஸ்கெட்டுகளை ஒரு பாக்கெட்டில் வைத்து நாள் ஒன்றுக்கு பொதுமக்களிடம் இருந்து இந்த நிறுவனம் ரூ.29 லட்சம் வரை மோசடி செய்கிறது என்று கூறி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அந்த பிஸ்கெட் நிறுவனம் சார்பில் கோர்ட்டில் விளக்கம் அளிக்கும்போது, 'ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் எடை 76 கிராம் என்ற அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டுக்கு உள்ளே உள்ள பிஸ்கெட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை. பொதுவாக வணிக சட்டத்தின் படி ஒரு பாக்கெட் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் 4.5 கிராம் வரை குறைவாக இருக்கலாம் என்று கூறப்படும் என்று தெரிவித்தனர்.

ரூ.1 லட்சம் இழப்பீடு

இதையடுத்து நுகர்வோர் கோர்ட்டு விசாரணை முடிவில் ஒரு உணவுப் பொருள் பாக்கெட் செய்யப்பட்ட பின்பு காற்று, மழை போன்ற இயற்கை காரணங்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லப்படும் சூழ்நிலையில் 4.6 கிராம் எடை குறையலாம் என்று வணிக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை பிஸ்கெட்டுகளுக்கு கிடையாது. காரணம் பிஸ்கட் பாக்கெட் இதுபோன்ற காரணங்களால் எடை குறைய வாய்ப்பில்லை. மேலும் பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை விற்பனை செய்யவில்லை. எடையின் அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஏனென்றால் பிஸ்கெட் பாக்கெட் கவரில் 16 பிஸ்கெட்டுகள் உள்ளே உள்ளன என்று கூறப்பட்டுள்ளதை தவிர எடையைப் பற்றி கூறவில்லை என கூறிய கோர்ட்டு வழக்கை தொடர்ந்த டில்லிபாபுவுக்கு பிஸ்கெட் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


Next Story