தற்கொலை செய்ய நினைத்தவர் ஒருவர்.. இறந்தவர் வேறொருவர்.. மதுவில் சயனைடு கலந்ததால் விபரீதம்


தற்கொலை செய்ய நினைத்தவர் ஒருவர்.. இறந்தவர் வேறொருவர்.. மதுவில் சயனைடு கலந்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 24 Feb 2024 8:56 PM GMT (Updated: 25 Feb 2024 6:52 AM GMT)

சயனைடு கலந்து வைத்திருந்த மதுவை இன்னொருவர் குடித்ததால் அவரது உயிர் பறிபோனது.

சேலம்,

சேலம் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்தவர் தசீர் உசேன். வெள்ளி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். வேலைக்கு செல்லும் தசீர் உசேன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மனைவி கிச்சிப்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் இனிமேல் உன்னோடு சேர்ந்து வாழ முடியாது என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தசீர் உசேன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவை வாங்கி அதில் வெள்ளி தொழிலில் பயன்படுத்தும் சயனைடை கலந்து வைத்திருந்தார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருந்த தசீர் உசேன், ஒருமுறை மனைவியிடம் பேசி பார்க்கலாம் என நினைத்து சயனைடு கலந்த மதுவை யாருக்கும் தெரியாமல் வீட்டில் பீரோவுக்கு அடியில் மறைத்து வைத்திருந்தார்.

இதனிடையே தசீர் உசேனின் தம்பியான கார் டிரைவர் சதாம் உசேன் (வயது 32) நேற்று முன்தினம் இரவு தனது அண்ணனின் வீட்டிற்கு சென்றார். அங்கு அண்ணன் வழக்கமாக மதுபாட்டிலை பீரோவுக்கு அடியில் மறைத்து வைப்பது வழக்கம் என்பதால் மதுபாட்டில் ஏதேனும் இருக்கிறதா? என சதாம் உசேன் பார்த்தார். அப்போது அங்கிருந்த மதுபாட்டிலை எடுத்து கொண்டு நண்பரும், தொழிலாளியுமான அசேன் (39) என்பவருடன் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் பாரில் அமர்ந்து மதுவை டம்ளரில் ஊற்றி குடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சதாம் உசேனுக்கும், அசேனுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த பாரில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி சதாம் உசேனின் நண்பரான அசேன் பரிதாபமாக இறந்தார். அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சதாம் உசேனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுவில் சயனைடு கலந்து வைத்திருந்த தசீர் உசேனை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலத்தில் சயனைடு கலந்து வைத்திருந்த மதுவை குடித்த தொழிலாளி இறந்ததும், அவருடைய நண்பர் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கார் டிரைவரான சதாம் உசேன் மதுவில் பிராந்தி வகையை மட்டும் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் அவருடைய அண்ணன் வீட்டில் வாங்கி வைத்திருந்தது ரம் மது வகையை சேர்ந்ததாகும். இதனால் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்ற சதாம் உசேன், அங்கிருந்த விற்பனையாளரிடம் நான் பிராந்தி மட்டும் தான் குடிப்பேன். ஆனால் உங்கள் கடையில் தான் ரம் வாங்கினோம். எனவே ரம் பாட்டிலை வைத்து கொண்டு பிராந்தி தாருங்கள் என கேட்டுள்ளார்.

பின்னர் அந்த மதுபாட்டிலை விற்பனையாளர் வாங்கி பார்த்தபோது எந்த கடையில் இதை வாங்கினீர்கள்? என்று தெரியாது. மேலும் பாட்டிலின் மூடியில் ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டிருப்பதால் மாற்றி தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார். அதற்கு அவர், நாங்கள் எப்போதும் இந்த கடையில் தான் மது வாங்குவோம். தயவு செய்து மாற்றி தாருங்கள் என கேட்டும், தர மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சதாம் உசேன், அசேன் ஆகியோர் அதே மதுவை குடித்துவிட்டனர். அந்த மதுபாட்டிலை டாஸ்மாக் கடையில் மாற்றி கொடுத்திருந்தால் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் யாராவது அந்த மதுவை குடித்து விபரீதம் நிகழ்ந்திருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story