சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது


சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது
x

சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது. கிலோ ரூ.75 ஆக அதிகரித்தது.

பெரம்பலூர்

சின்ன வெங்காயம்

தக்காளி விலை கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு கடுமையாக உயர்ந்திருந்தது. அதன்பின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது, வீதிக்கு வந்தது. தற்போது தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனையாகி வருகிறது. அதோடு மற்ற காய்கறிகளின் விலைகள் சற்றும் குறைந்து இருந்தது. சின்ன வெங்காயம் விலையும் ஓரளவு சரிந்தது. பெரம்பலூர் உழவர் சந்தையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்பனையாகி வந்தது.

தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் சின்ன வெங்காயம் அதிகம் உற்பத்தியாகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. உழவர் சந்தையில் நேற்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.75-க்கு விற்றது. சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது. சில்லரை கடைகளில் இதனை விட சற்று கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கினால் சின்ன வெங்காயத்தின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது, என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

பீன்ஸ் கிலோ ரூ.100

பெரம்பலூர் உழவர்சந்தையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்த காய்கறிகளின் விலைகளை விட தற்போது சிறிது அதிகரித்துள்ளது. கிலோ ரூ.76-க்கு விற்ற பீன்ஸ் நேற்று ரூ.100-க்கும், ரூ.36-க்கு விற்ற பீர்க்கங்காய் ரூ.50-க்கும், ரூ.48-க்கு விற்ற பாகற்காய் ரூ.60-க்கும், ரூ.48-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.84-க்கும், ரூ.48-க்கு விற்ற கருணைகிழங்கு ரூ.60-க்கும், ரூ.40க்கு விற்ற கேரட் ரூ.48-க்கும் விற்பனையானது. புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகள் சாப்பிட்டு வரும் சூழ்நிலையில் காய்கறிகளின் இந்த விலை உயர்வு பொதுமக்களை சற்று கவலையடைய செய்துள்ளது.


Next Story