ஆன்லைன் ரம்மி: கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஆன்லைன் ரம்மி: கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 March 2023 5:49 AM GMT (Updated: 23 March 2023 5:53 AM GMT)

ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

ஆன்லைன் ரம்மி தடை தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த 41 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாளுக்குள் நாள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மிகவும் கனத்த இதயத்துடன் தான் சட்டமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னரே தடை மசோதா கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல் பெறப்பட்டன.

ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். தடை மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கம் 24 மணி நேரத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தால் மாணவர்களின் படைப்பாற்றல் பாதிப்பதாக 74 சதவீதம் ஆசிரியர்கள் கருத்து கூறியிருந்தனர். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 131 நாட்களுக்கு பின் கவர்னர் திருப்பி அனுப்பினார்.

சட்ட ஒழுங்கைப் பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசின் மிக முக்கியமான ந்கடமை. மாநில எல்லைக்குள் மக்கள் அனைவரையும் காக்க, மாநில அரசுக்கு உரிமை உண்டு. மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவை, மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும். இதயமுள்ளவர்கள் யாரும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அறிவால் உருவக்கப்பட்ட சட்டம் அல்ல; இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story