தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் தான்தி.மு.க. நிறைவேற்றி இருக்கிறது-எடப்பாடி பழனிசாமி பேச்சு


தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் தான்தி.மு.க. நிறைவேற்றி இருக்கிறது-எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

முதல்-அமைச்சர் ஸ்டாலின், 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பேசுகிறார். 10 சதவீதம் வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி இருக்கிறது என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை


முதல்-அமைச்சர் ஸ்டாலின், 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பேசுகிறார். 10 சதவீதம் வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி இருக்கிறது என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கட்சி கொடியேற்று விழா

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கூத்தியார்குண்டில் 51 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொடி ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து, வலையங்குளம் ரிங்ரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. டாக்டர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த விழாக்களில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. ஒன்று தான் ஏழை மக்களுக்கான கட்சி. இங்கு சாதாரண தொண்டன் கூட உச்ச நிலைக்கு வரமுடியும். அது ஜனநாயகமுள்ள கட்சி. ஆனால் தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான். அந்த குடும்ப கட்சியில் பல டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களது வேலையே ஊழல் செய்வது தான். கலெக்ஷன், கரப்பஷன் தான். இதனை துல்லியமாக செய்வார்கள். தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மடிந்து இருக்கிறது. தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீததத்தை நிறைவேற்றி விட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அதாவது ஒரு பொய்யை அடிக்கடி பேசி உண்மையாக்க பார்க்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார். தி.மு.க. 520 வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. அதில் சிலவற்றை மட்டும் செய்து இருக்கிறார்கள். 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஐ.எஸ்.ஐ. முத்திரை

அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊழலை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்று கூறுகிறார். உண்மையில் எதிர்கட்சியாக இருக்கும் அதி.மு.க.விற்கு தான் ஊழலை பற்றி பேச முழு தகுதி இருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கபட்ட ஒரே ஆட்சி தி.மு.க.தான். வேறு எந்த அரசும் ஊழலுக்காக கலைக்கப்பட வில்லை. ஐ.எஸ்.ஐ. முத்திரை போல், ஊழல் முத்திரையை தி.மு.க.விற்கு குத்தியிருக்கிறார்கள்.

ஊழல் என்றால் தி.மு.க. தான். ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க. தான். தமிழகத்தில் ஊழல் விதையை விதைத்தவர் கருணாநிதி. அது செடியாகி, மரமாகி இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கிளை விட்டு இருக்கிறது. ஊழல் இல்லாத துறையே தமிழகத்தில் இல்லை. ஆனால் முதல்-அமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பது தமிழகம் என்று கூறுகிறார். உண்மையில் தமிழகம் ஊழலில் தான் முதன்மையாக இருக்கிறது. ஒரு சான்றிதழ் வாங்குவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட விடியா ஆட்சி தான் இந்த தி.மு.க. ஆட்சி.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட 8 பேர், தற்போது தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி என்ற அமைச்சர் 5 கட்சிக்கு சென்று வந்திருக்கிறார். ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க.விலும் நின்று ஜெயித்து இருக்கிறார். இந்த அதிசயம் யாருக்கும் நடந்ததில்லை. மக்களை ஏமாற்ற கூடிய அந்த நபர் தான் முதன்மை அமைச்சராக இருக்கிறார். அவரை ஸ்டாலின் புகழ்ந்து கொண்டு இருக்கிறார். பாவம் தி.மு.க.வில் இரவு-பகல் பாராமல் எத்தனையோ பேர் உழைத்து இருக்கிறார்கள். மூத்த உறுப்பினர்களுக்கு முக்கியமான பதவி, இலாக்கா இன்னும் கிடைக்கவில்லை.

வைகை கரை சாலை

இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு வாரிசுகள் கிடையாது. நாம் தான் அவர்களது வாரிசு. அவர்கள் வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காக தங்களை அர்பணித்தார்கள். ஏழைகளுக்காக சிந்தித்து, அவர்கள் கொண்டு வந்த திட்டங்களால் தான் தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது. 33 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சி செய்து இருக்கிறது. 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்து சென்ற போது தமிழகத்தில் 100-க்கு 32 பேர் உயர்கல்வி படித்தனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியின் போது 2019-ம் ஆண்டில் 100-க்கு 52 பேர் உயர் கல்வி படிக்க சென்றனர். இந்தியாவிலேயே ஒரு ஆண்டில் 11 மருத்து கல்லூரியை கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சியில்தான். 10 ஆண்டு காலத்தில் 7 சட்டக்கல்லூரி, 3 கால்நடை கல்லூரி, கால்நடை பூங்கா கொண்டு வந்தோம்.

அ.தி.மு.க. ஆட்சியின்போது கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். உதாரணமாக மதுரை நகரில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கொண்டு வரப்பட்ட ரூ.1296 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணிகள் கிடப்பில் உள்ளது. வைகை கரையில் அமைக்கப்பட்ட சாலை இன்னும் முழு பெறவில்லை.

தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. ஏழைகளுக்கு ஆசை வார்த்தை காட்டுவது. கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பது. ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவது. அது தான் தி.மு.க.வின் வாடிக்கை. தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம், சிலிண்டருக்கு ரூ.100 மானியம், முதியோர் உதவித்தொகை ரூ.1000-ம் என்று சொன்னார்கள். 21 மாதம் ஆகியும் நிறைவேற்றவில்லை. மக்களுக்கு பட்டை நாமம் போட்டு விட்டார்கள். கடந்த ஆண்டு தி.மு.க. கொடுத்த பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் செய்து இருக்கிறார்கள். அதனால் தான் புளியில் பல்லி, அரிசியில் வண்டு, மிளகில் பருத்தி கொட்டை, ஒழுகும் வெல்லம் கொடுத்தார்கள். தமிழகத்தில் சேலம், கவுந்தபாடியில் வெல்லம் கிடைக்கிறது. ஆனால் இங்கு ஊழல் செய்ய முடியாது என்பதால் வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்து ஊழல் செய்தார்கள்.

விலையேற்றம்

தற்போது கட்டுமான பொருட்கள் அனைத்தும் விலை ஏறி விட்டது. எனவே மக்கள் கனவில் தான் வீடு கட்ட முடியும். நிஜத்தில் வீடு கட்ட முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மூடை சிமெண்டு ரூ.290, இப்போது ரூ.409 ஆகும். ஒரு டன் கம்பி ரூ.32 ஆயிரத்திற்கு விற்றது. இப்போது ரூ.75 ஆயிரம். ஒரு செங்கல் ரூ.6. இப்போது 12 ரூபாய். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 520 வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதி, சொத்து வரியை ஏற்றமாட்டோம் என்பது. ஆனால் இப்போது 150 சதவீதம் வரை ஏற்றி விட்டார்கள். 100 யூனிட் இலவசம் மின்சாரத்திற்கு ஆப்பு வைக்க தான் மின் நம்பருடன் ஆதாரை இணைத்து வருகிறார்கள். ஆதாரை இணைந்து விட்டால் ஏதாவது ஒரு மானியம் மட்டுமே மக்கள் வாங்க முடியும். அதற்காக தான் இப்படி செய்கிறார்கள். மக்களுக்கு சுமை மேல் சுமை ஏற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story