வனத்தொழில் பழகுனர் பதவிக்கான தேர்வை கோவையில் 320 பேர் மட்டுமே எழுதினர்
வனத்தொழில் பழகுனர் பதவிக்கான தேர்வை கோவையில் 320 பேர் மட்டுமே எழுதினர். 1,144 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை
வனத்தொழில் பழகுனர் பதவிக்கான தேர்வை கோவையில் 320 பேர் மட்டுமே எழுதினர். 1,144 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வனத்தொழில் பழகுனர் பதவி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வன சார்நிலை பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வானது ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 2 மையங்களில் நடந்தது.
இந்த தேர்வை எழுத 1,464 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 320 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இது 21.86 சதவீதம் ஆகும். மீதமுள்ள 1,144 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 78.14 சதவீதம் ஆகும். தேர்வு மையங்களில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் நேரில் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டார்.
கணினி வழி தேர்வு
வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வை எழுத 78.14 சதவீதம் பேர் வராதது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிற மாவட்டங்களில் இந்த தேர்வை சராசரியாக 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகளிம் கேட்டபோது, வனத்தொழில் பழகுனர் பதவியில் 10 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துதேர்வு நடந்தது. குறைந்த அளவவே காலிப்பணியிடங்கள் இருந்ததால் தேர்வா்களின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கலாம் என்றனர்.
தொடர்ந்து கணினி வழி தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை காலை மற்றும் மாலையிலும், 11-ந் தேதி காலையில் மட்டும் நடைபெறுகிறது.