நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் - ராதாகிருஷ்ணன்


நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் -  ராதாகிருஷ்ணன்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது விவசாயிகளிடம் மூட்டைகளுக்கு கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு

நேரடி நெல் கொள்முதல்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட குன்னங்குளத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நேற்று கிராமத்தில் தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் திறந்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தார்.

பின்னர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் 2,271 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. ஜனவரி கடைசியிலும், பிப்ரவரி தொடக்கத்திலும், டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக நாள் ஒன்றுக்கு 49 ஆயிரம் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் உதவி

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நல்ல ரக நெல் மூலம் தரமான அரிசி கிடைப்பதனால் மக்களிடம் பெருமளவு வரவேற்பு உள்ளது. அதில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1.8 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த ஆண்டை விட அதிகமாக 50 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்ய அறிவித்துள்ளார்கள். நடப்பு ஆண்டில் 12 ஆயிரம் கோடி இலக்காக வைத்து விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்க அறிவுறுத்தி உள்ளார்கள். டெல்டா பகுதிகளில் இதுவரைக்கும் 697 தொடக்க வேளாண்மை வங்கிகள் உள்ளன. அங்கு கடந்த 15-ந் தேதி வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1700 கோடிக்கு கடன் உதவிகள் கொடுத்துள்ளோம்.

மழைக்காலங்களில்...

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரையில் மாவட்ட கலெக்டர் நெல் விளைச்சல் அதிகம் உள்ள 83 பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள். மேலும் நெல் விளைச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். மழைக்காலங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாக்க 56 ஆயிரம் தார்ப்பாய்கள், 57 ஆயிரம் நெகிழி பைகள், 21 ஆயிரம் மேற்பட்ட எச்.டி.டி.பி. நெட்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

புகார்களுக்கு அணுகலாம்

கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளுக்கு கூடுதலான தொகை விவசாயிகளிடம் இருந்து வசூல் செய்யப்படுவதாக வந்த புகார்களைதொடர்ந்து அதை கண்காணிக்க நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பான புகார்களுக்கு முதுநிலை மண்டல மேலாளர்-9444051540, அலுவலக தொலைபேசி எண்.044-27420071, மேலாண்மை இயக்குநர்-1800-599-3540, 044-26421663, 26421665 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அணுகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story