சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 9-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதாவது, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை-மதுரை
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முன்பதிவு
மேலும், பல்வேறு வழிதடங்களில் செல்லும் அரசு பஸ்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சீபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.