எடப்பாடி அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக எடப்பாடி அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எடப்பாடி:-
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக எடப்பாடி அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு கலைக்கல்லூரி
எடப்பாடியில் சங்ககிரி பிரதான சாலையில் கோணமோரி பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல், சரக்கு வாகனங்களில் பயணம் செய்து வந்தனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக கடந்த 30-ந் தேதி 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அமைச்சர்
இதனிடையே சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் கோணமோரி பகுதியில் அமைந்துள்ள எடப்பாடி அரசு கலைக்கல்லூரியை பார்வையிட்டனர். மேலும் தினத்தந்தியில் வந்த செய்தி குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு உரிய நேரத்தில் போதிய பஸ் போக்குவரத்து வசதி இல்லாததை அறிந்த அமைச்சர் கே.என்.நேரு உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கல்லூரிக்கு மாணவர்கள் வந்து செல்லும் நேரத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க உத்தரவிட்டார்.
பஸ் இயக்கம்
மேலும் அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு, மாணவர்கள் பாதுகாப்பாக கல்லூரிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டுமென ஆலோசனைகள் வழங்கினார். இதையடுத்து அங்கு வந்த எடப்பாடி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜா மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கந்தசாமி, பாஸ்கர் ஆகியோர் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு எடப்பாடி நகர பஸ் நிலையத்தில் இருந்து தனி பஸ்கள் வரவழைக்கப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை எடப்பாடி நகராட்சி தலைவர் டி.எஸ்.எம்.பாஷா உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். பஸ் பயணத்தின் போது மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கல்லூரியின் முதல்வர் வெங்கடேஸ்வரன் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு விவரித்தனர்.
மகிழ்ச்சி
மாணவ-மாணவிகள் நலன் கருதி நேற்று 3 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. எடப்பாடி அரசு கலை கல்லூரிக்கு கூடுதல் எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மாணவ-மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
----------