சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருப்பதி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பதி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை திருப்பதிக்கு 18 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து குப்பம், சித்தூர் வழியாக திருப்பதிக்கு 5 பஸ்களும், கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பதிக்கு 5 பஸ்களும், ஓசூரில் இருந்து திருப்பதிக்கு 4 பஸ்களும், அரூரில் இருந்து திருப்பதிக்கு வேலூர், சித்தூர் வழியாக 4 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பான பயணம்
மேலும் பக்தர்கள் குழுவாக சேர்ந்து திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தர்மபுரியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பல்வேறு வழித்தடங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.