தர்மபுரி அருகே சோகத்தூரில்வீடுகளின் முன்பு சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புபா.ம.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


தர்மபுரி அருகே சோகத்தூரில்வீடுகளின் முன்பு சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புபா.ம.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 March 2023 7:00 PM GMT (Updated: 25 March 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி அருகே சோகத்தூரில் வீடுகளின் முன்பு சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பா.ம.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரங்கப்பாதை

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தர்மபுரி- ஓசூர் இடையே விரைவு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விரைவு சாலையில் ஆங்காங்கே கனரக வாகனங்கள் செல்வதற்கு வசதியாக மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதில் 60 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது..

இந்த நிலையில் தர்மபுரி அருகே சோகத்தூரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

மேலும் அவர்கள் பணியை செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ம.க. பிரமுகர் திருப்பதி என்பவர் திடீரென மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அவரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. அங்கு சென்றார். அப்போது அவரிடம் வீடுகளின் முன்பு சுரங்கப்பாதை அமைக்காமல் சிறிது தூரம் தள்ளி இணைப்பு சாலையை இணைத்து சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. அந்த பகுதியில் ஆய்வு செய்தார். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

மாற்றுப்பாதையில் சுரங்கப்பாதை

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனரிடம் எம்.எல்.ஏ. தொடர்பு கொண்டு சுரங்கப்பாதை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வீடுகளின் முன்பு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கைவிடப்பட்டு, மாற்றுப்பாதையில் சுரங்கப்பதை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.


Next Story