பள்ளி இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிர்ப்பு; கிராம மக்கள் சாலை மறியல்


பள்ளி இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிர்ப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
x

திருக்கோவிலூர் அருகே பள்ளி இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

ஊராட்சி மன்ற அலுவலகம்

திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி விரைவில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அவ்வாறு தரம் உயர்த்தப்படும் போது கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட இடம் தேவைப்படும். இந்த நிலையில் பள்ளியில் உள்ள பழுதடைந்த சில கட்டிடங்களை இடித்துவிட்டு அங்க கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளி இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி பத்து ரூபாய் இயக்கம் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் டேவிட்குமார் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இருப்பினும் கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று முன்தினம் திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி சாலையில் செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story