திருத்தணி அருகே இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு


திருத்தணி அருகே இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 Nov 2022 9:49 AM IST (Updated: 5 Nov 2022 9:50 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே இயற்கை எரிவாயு குழாய் புதைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

திருவள்ளூர்

வீடுகளுக்கான நகர இயற்கை எரிவாயு வினியோக திட்டத்திற்காக திருத்தணி அடுத்த அருங்குளம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் கெயில் இந்திய நிறுவனத்தின் வால்வு ஸ்டேஷன் பகுதியிலிருந்து மாமண்டூர் வழியாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது.

இயற்கை எரிவாயு குழாய் புதைப்பதற்கு மாமண்டூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து மாமண்டூர் கிராம பொதுமக்களுக்கும், எரிவாயு குழாய் பதிக்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை திருத்தணி ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாமண்டூர் கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம். மேலும் இந்த எரிவாயு திட்டம் குறித்து அரசு மற்றும் தனியார் நிறுவனம் முறையான அறிவிப்பை தங்கள் கிராமத்திற்கு தெரிவிக்கவில்லை. எரிவாயு குழாய் பதிப்பதால் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பஸ் நிலையம் ஆகியவை பாதிப்படையும் என கூறி மறுப்பு தெரிவித்தனர்.

3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எரிவாயு பதிக்கும் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். எனவே இந்த அமைதி போச்சுவார்த்தை கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த கூட்டத்தில் திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, மாமண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சா, தனியார் நிறுவன அதிகாரிகள் தாமோதரன், அரிக்கிருஷ்ணன், சிராக் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story