பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்


பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
x

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆகஸ்டு் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம், ஜனவரி 26 குடியரசு தினம் உள்ளிட்ட 4 நாட்களிலும் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

மேலும் நாள்தோறும் இரவு நேரங்களில் கிராமத்து மைதானத்தில் ஒன்று திரண்டு விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தின் 200-வது நாளான நேற்று போராட்டத்தை நடத்தி கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட போராட்ட குழு மற்றும் கிராம குடியிருப்போர் விவசாயிகள் நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன உரையாற்றினார்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமத்தை சேர்ந்த கிராம மக்களிடம் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும்

அமைதியான முறையில் கிராமத்தில் நடந்து வரும் போராட்டத்தை சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் வகையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டாம் என தமிழக அரசையும் தமிழ்நாடு முதல்-அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

200-வது நாள் போராட்டத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் காஞ்சீபுரம் சரகத்தை சேர்ந்த காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1,200 போலீசார் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வக்கீல் வெற்றிசெல்வன் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை பொறுத்து போராட்ட களம் மாறுபடும் என கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story