விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு; 4-வது நாளாக போராட்டம்
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக போராட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக போராட்டம் நடந்தது.
புதிய மதுக்கடை
திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தை அடுத்த வெளியாத்தூர் ஊராட்சி பகுதியில் விவசாய நிலத்தில் புதிய மதுக்கடை வைப்பதற்காக கடை கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக தயா ராக இருந்தது. இதையடுத்து இந்த பகுதியில் புதிய மதுக்கடை திறக்ககூடாது என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சாத்தனூர், வெளியாத்தூர், கண்டரமாணிக்கம் மற்றும் கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று 4-வது நாளாக அங்கு திரண்ட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு காத்திருப்பு போராட்டத்தை அறிவித்து புதிய கடை முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தில் சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி, பொருளாளர் ஜெயந்தி, தமிழ்நாடு விவசாய சங்க முன்னேற்ற தலைவர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் மோகன், பொருளாளர் விஸ்வநாதன், தாலுகா செயலாளர்கள் அழகர்சாமி, ஆறுமுகம், காந்திமதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். திருப்பத்தூர் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் புதிய மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.