ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி


ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 9 May 2023 1:01 PM IST (Updated: 9 May 2023 1:14 PM IST)
t-max-icont-min-icon

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினைக்குப் பிறகு, ஒ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்துக்குப் பின்னரும் அதிமுக விவகாரம் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில், சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். தர்ம யுத்தம் தொடங்கியதே டிடிவி தினகரனுக்கு எதிராக தான் என்றெல்லாம் சொல்லிவிட்டு தற்போது அவரை சந்தித்துள்ளார். எந்த சுழ்நிலையிலும் அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வர முடியாது.

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன்னிப்பே கிடையாது. சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் தற்போது சின்னம்மா என்று கூறுகிறார். ஓ.பன்னீர்செல்வத்துடன் உள்ள மற்றவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஓ.பிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி கட்சி முடிவு செய்யும். டிடிவி தினகரன் சொல்வதையெல்லாம் நகைச்சுவையாக தான் எடுத்துக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story