ஓடிவந்து ஏறியதை கண்டித்ததால் ஆத்திரம்: மாநகர பஸ் கண்டக்டரை தாக்கிய இளம்பெண் - சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவால் பரபரப்பு


ஓடிவந்து ஏறியதை கண்டித்ததால் ஆத்திரம்: மாநகர பஸ் கண்டக்டரை தாக்கிய இளம்பெண் - சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவால் பரபரப்பு
x

ஓடிவந்து ஏறியதை கண்டித்ததால் ஆத்திரத்தில் மாநகர பஸ் கண்டக்டரை இளம்பெண் தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் அனிதா (வயது 30). இவர், மயிலாப்பூரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பஸ் நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர பஸ்சில்(தடம் எண் 42 ஏ) ஓடிச்சென்று ஏறினார். அதற்கு பஸ் கண்டக்டர் செல்வக்குமார் (42) அனிதாவை கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளம்பெண், கண்டக்டரை திட்டியபடியே பஸ்சில் பயணம் செய்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் செல்வக்குமார், பெரம்பூர் பஸ் நிறுத்தத்தில் அந்த பெண்ணை பஸ்சை விட்டு கீழே இறங்கும்படி கூறினார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் திடீரென கையால் கண்டக்டர் செல்வக்குமாைர தாக்கினார்.

பதிலுக்கு அவரும் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கண்டக்டர் மற்றும் இளம்பெண் என 2 பேரிடமும் புகாரை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகர பஸ் கண்டக்டரை இளம்பெண் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story