பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாயை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்


பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாயை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 Jun 2023 1:34 AM IST (Updated: 19 Jun 2023 7:12 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாயை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். வீடு, வீடாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

ஆரல்வாய்மொழியில் பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாயை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். வீடு, வீடாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பச்சிளம் குழந்தை

ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகே சாலையோரம் உள்ள ஒரு கோவில் முன்பு நேற்று முன்தினம் மதியம் 2.40 மணியளவில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. கடும் வெயிலுக்கு இடையே அந்த குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு செவிலியர்கள் குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்தனர்.

தொடர்ந்து குழந்தையை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை பிறந்து ஓரிரு நாளே இருக்கலாம் என டாக்டா்கள் தெரிவித்தனர்.

கர்ப்பிணிகள் விவரம் சேகரிப்பு

குழந்தையை கோவில் முன்பு வீசிச்சென்ற கொடூர தாய் யாரென்று தெரியவில்லை. அந்த தாயை ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முறை தவறி பிறந்ததால் குழந்தையை கோவில் முன்பு வீசினாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்ததா? என்று வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து குழந்தையின் தாயார் யார்? என்பதை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

அதிகாரிகள் வீடு, வீடாக விசாரணை நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story