தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்


தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 7 Oct 2023 6:52 PM GMT (Updated: 7 Oct 2023 6:53 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே தண்ணீா் இல்லாமல் கருகும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே தண்ணீா் இல்லாமல் கருகும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை திறப்பு

டெல்டா மாவட்ட விவசாய சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.இருப்பினும் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆறுகளில் விவசாயிகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை. ஆனால் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இதை பயன்படுத்தி கொண்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவீரம் காட்டினர்.

2-ம் போக சாகுபடி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் அப்பகுதி விவசாயிகள் முதல் போகம் என்று சொல்லக்கூடிய நெற்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். எதிர்பார்த்த அளவில் தண்ணீர் இல்லாமல் போனதாலும், மழை கை கொடுக்காமல் போனதாலும், கடுமையான சிரமங்களுக்கு இடையே முதல் போக நெற்பயிர் சாகுபடி பணிகளை அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், முதல் போக சாகுபடியில் ஈடுபடாத கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர், 2-ம் போக சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருகிய பயிர்கள்

கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், வேற்குடி, தண்ணீர்குன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் வயல்களில் முறையாக உழவு செய்து, 2-ம் போக சாகுபடியான சம்பா தெளி விதைகள் தெளித்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெண்ணாற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனதாலும், மழை பெய்யாததாலும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதாலும், வேற்குடி, தண்ணீர்குன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள சில இடங்களில், 2-ம் போக சம்பா நெற்பயிர்கள், வளர தொடங்கிய தருணத்திலேயே, கருகிய நிலையில் காணப்படுகிறது.

விவசாயிகள் வேதனை

குறிப்பாக, வயல்களில் தண்ணீர் இன்றி போனதால் விரிசல்கள் ஏற்பட்டு கட்டாந்தரை போல வயல்கள் காணப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால், முதல் போக சாகுபடியை தவிர்த்த விவசாயிகளுக்கு 2-ம் போக பயிர்கள் தண்ணீர் அன்றி கருகுவதை கண்டு கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள பல விவசாயிகள் வேதனை அடைந்தனர்.


Next Story