எந்திரங்களுக்கு பதிலாக ஆட்கள் மூலம் சம்பா நெல் அறுவடை
சேதுபாவாசத்திரம் பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து எந்திரங்களுக்கு பதிலாக ஆட்கள் மூலம் சம்பா நெல் அறுவடையை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
சேதுபாவாசத்திரம் பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து எந்திரங்களுக்கு பதிலாக ஆட்கள் மூலம் சம்பா நெல் அறுவடையை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
நடவு பணிகள்
மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. முன் கூட்டியே அணை திறக்கப்பட்ட நிலையில் அணையில் போதுமான தண்ணீரும் இருந்தது. ஆனாலும் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளுக்கு 5 நாட்கள் வீதம் முறை வைத்து தான் தண்ணீர் வழங்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் நடவு பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. பரவலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நடவு பணிகளையும், நேரடி விதைப்பிற்கு பக்குவமான பகுதிகளில் கடைமடை விவசாயிகள் நேரடி விதைப்பும் செய்தனர்.
காலம் தாழ்த்தி...
சேதுபாவாசத்திரம் பகுதியில் காலம் தாழ்த்தி சம்பா சாகுபடி செய்திருந்தாலும் 60 சதவீதத்திற்கு மேல் நேரடி விதைப்பு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் சம்பா சாகுபடி நடந்தது. இந்த பயிர்களை அறுவடை செய்யும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியது.
இந்த நிலையில் இந்த மாதம் (பிப்ரவரி) தொடக்கத்தில் பெய்த கன மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அறுவடை செய்த வைக்கோலும் சேதமடைந்தது.
மழை பாதிப்பு
மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, பூக்கொல்லை, பெருமகளூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மீண்டும் அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அறுவடை எந்திரங்களை வயலுக்குள் இறக்கி அறுவடை செய்வது சிரமமாக உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் எந்திரங்களுக்கு பதிலாக விவசாயிகள் ஆட்கள் மூலம் அறுவடை பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.