பழனி முருகன் கோவில் ரோப்காரில் 4 புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்


பழனி முருகன் கோவில் ரோப்காரில் 4 புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
x

பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்லும் ரோப்காரில் 4 புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பழனி:

பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி ரோப்கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன.

அதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி இரு வழிகளிலும் (அதாவது மேல்நோக்கி செல்ல ஒரு பெட்டியும், கீழ்நோக்கி வருவதற்கு ஒரு பெட்டியும்) தலா ஒரு புது ரோப் பெட்டியை பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்ததால் விரைவில் அனைத்து பெட்டிகளும் பொருத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சேவை நிறுத்தப்பட்டு பணி நடந்தது. இதற்கிடையே நேற்று ரோப்காரில் 4 புதிய ரோப் பெட்டிகள் பொருத்தப்பட்டன. அதாவது ஒரு வழியில் 3 பெட்டிகளும், மற்றொரு வழியில் ஒரு பெட்டியும் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது 6 புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன. விரைவில் மீதமுள்ள 2 பெட்டிகளும் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story