பள்ளிக்கரணையில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு - 3 பேர் கைது


பள்ளிக்கரணையில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு - 3 பேர் கைது
x

பள்ளிக்கரணையில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அவரது இருசக்கர வாகனத்தில் நண்பர் வெங்கடேசுடன் பள்ளிக்கரணை ஏரிக்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

மின்வெளிச்சம் இல்லாத இருள் சூழ்ந்த பாதையில் இருவரும் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை கண்டு அதிர்ந்து போன சதீஷ், தங்களிடம் பணம் இல்லை என்றார்.

பின்னர் சதீஷ் அணிந்திருந்த 2 தங்க மோதிரத்தை கத்தி முனையில் மிரட்டி கேட்டனர். அவர் தரமறுத்ததால் சதீஷ் கையை கத்தியால் வெட்டியதுடன், மோதிரத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினர். பின்னர் 2 தங்க மோதிரத்தையும் பறித்துக்கொண்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த நிலையில் சென்னை பள்ளிக்கரணை காமகோடி நகர் பிரதான சாலையில் 3 பேர் கையில் கத்தியுடன் ஒருவரை விரட்டிச்செல்வதாக வந்த தகவலின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு 3 பேரும் போதை தலைக்கேறிய நிலையில் கத்தியுடன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 3 பேரையும் பிடிக்க சென்ற போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டினர். ஆனாலும் போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்தனர்.

அப்போது ஒருவன் மட்டும் தப்பி ஓட அருகில் இருந்த வீட்டின் சுவரை தாண்டி குதித்தான். இதில் தவறி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் போலீசாரிடமே சிகிச்சை அளிக்க அழைத்து செல்லும்படி கதறினார். அவரை ேபாலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று கையில் மாவு கட்டு போட்டனர்.

விசாரணையில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறித்தது ஒட்டியம்பாக்கம் அருகே உள்ள காரணை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 23), பள்ளிக்கரணையை சேர்ந்த கிங்ஸ்லி பால் (22), விஷ்ணு (22) என தெரியவந்தது.

இவர்களில் விக்னேஷ் மற்றும் கிங்ஸ்லி பால் இருவரும் ஏற்கனவே கொலை வழக்கில் சிறை சென்று வந்ததும் ெதரிந்தது. இதில் விக்னேஷ் என்பவருக்குதான் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. 3 பேரையும் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், பின்னர் கோா்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான 3 பேரும் மது பாட்டில்களையும், பட்டாக்கத்திகளையும் வைத்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்டு கெத்து காட்டியது தெரிந்தது. அந்த வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story