ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது.
ஸ்ரீரங்கம்:
பங்குனி திருவிழா
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிகளுக்கு சென்று வந்தார். உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான நம்பெருமாள்-ரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை நடந்தது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேர் எனப்படும் கோ ரத புறப்பாடு நேற்று நடந்தது. இதற்கென தாயார் சன்னதி சேர்த்தி உற்சவத்தில் இருந்தபடி உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 9 மணியளவில் பச்சை சாதரா பட்டுடுத்தி, முத்துவளையக் கொண்டை, கஸ்தூரி திலகம், கவுஸ்துபம் எனப்படும் நீலமணிநாயகம், ரத்தின அபயஹஸ்தம் உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து தேருக்கு புறப்பட்டார். அங்கிருந்து சித்திரை வீதி வடகிழக்கு மூலையில் நின்றிருந்த கோ ரதத்தில் காலை 10 மணியளவில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 10.45 மணியளவில் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் கோ ரதம் வடம் பிடிக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், கஸ்தூரி ரங்கா... காவேரி ரங்கா... என பக்தி பரவசத்துடன் முழங்கியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கீழச்சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேலச்சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகள் வழியாக தேர் ஆடி அசைந்து வந்து மதியம் 3.15 மணியளவில் மீண்டும் நிலையை அடைந்தது.
பல்லக்கு உலா
தேரோட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் தேரில் இருந்து பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளினார். இரவில் சப்தாவரணமும், இன்று(வெள்ளிக்கிழமை) 7-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உலாவும் நடந்து பங்குனித்திருவிழா நிறைவுபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.