தூத்துக்குடியில் பயங்கரம்: அதிகாலையில் வீடு புகுந்து பெண் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை...!
விளாத்திகுளம் அருகில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் உட்பட 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 50). இவரது வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் வசிப்பவர் பிச்சையா மனைவி ராஜம்மாள்(68).
இந்நிலையில் இன்று அதிகாலை பொன்னுச்சாமியின் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் உறங்கிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பின்னர், பொன்னுச்சாமியின் வீட்டிற்கு அருகே உள்ள வீட்டிற்கு அந்த கும்பல் சென்றது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாளையும் வெட்டிக் கொன்றது.
பின்னர், இருவரையும் வெட்டி கொன்ற அந்த கும்பல் அங்கிருந்த தப்பியோடியது. இருவரது வீட்டின் கதவுகளும் திறந்து கிடந்ததை அவ்வழியாக வந்த பஸ் டிரைவர் பார்த்து சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, பொன்னுச்சாமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், ராஜம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அடுத்தடுத்த வீடுகளில் 2 பேரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.