ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டால்தான் ஒற்றை தலைமை தீர்மானம் செல்லுமா?


ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டால்தான் ஒற்றை தலைமை தீர்மானம் செல்லுமா?
x

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரி தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து தேவையா? என்பது குறித்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் முடிவுக்கு பின்னர் மாற்றம்

அ.தி.மு.க.வை ராமர்-லட்சுமணன் போன்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒற்றுமையாக நடத்தி வருகிறார்கள். இரட்டை குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்படுகிறார்கள் என்று தேர்தல் முடிவுக்கு முன்னர் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் முழங்கி வந்தனர்.

தேர்தல் முடிவுக்கு பின்னர் அ.தி.மு.க.வுக்கு இனி இரட்டை தலைமை தேவை இல்லை. ஒற்றை தலைமை போதும் என்ற கருத்தை முன்னெடுத்துள்ளனர். ஒற்றை தலைமை முடிவை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முயற்சி

தற்போது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து பொது தீர்மானம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முன்னெடுத்த முயற்சியை ஓ.பன்னீர்செல்வம் தடுத்து நிறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேரும் சேர்ந்து கையெழுத்திட்டால்தான் அந்த தீர்மானம் செல்லும். எனவே ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது' என்று கூறியிருந்தார். இதையடுத்து ஒற்றை தலைமை குறித்து பொது தீர்மானம் கொண்டு வரும் முயற்சியை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கைவிட்டனர்.

அ.தி.மு.க. சட்டத்திட்ட விதி

தற்போது பொதுக்குழுவில் தனித்தீர்மானமாக இதனை கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். அப்படி பொதுக்குழு கூட்டத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து தேவையா? அவரது ஒப்புதல் இருந்தால்தான் தனித்தீர்மானம் செல்லுமா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் அ.தி.மு.க.வின் சட்டத்திட்ட விதிகளை புரட்டி பார்த்து அளித்த விளக்கம் வருமாறு:-

அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளரான ஜெயலலிதாவுக்கு பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றவுடன் மீண்டும் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

அப்போது, அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொண்டு வரப்பட்டது. இதற்கு பொதுச்செயலாளர் கையெழுத்து பெறவில்லை. அது தேவையும் இல்லை. ஏனென்றால் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். இந்த கட்சியை ஆரம்பிக்கும்போதே கட்சி சட்டத்திட்ட விதிகளை தெளிவாக வகுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் அனுமதியோடு பொதுக்குழு உறுப்பினர்கள் யார் வேண்டும் என்றாலும் ஒற்றை தலைமை கோரி தனி தீர்மானம் கொண்டுவர முடியும்.

இதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தீர்மானம் கொண்டுவரப்பட்டால் முதலில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். பின்னர் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்த தீர்மானத்தை ஏற்போர் அதிகம் இருந்தால் தீர்மானம் செல்லும். எதிர்ப்போர் அதிகம் இருந்தால் தீர்மானம் செல்லாது. எனவே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று யாரேனும் முற்பட்டால் அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் அனுமதியோ, அவரது ஒப்புதலோ, கையொப்பமோ தேவை இல்லை. இது எம்.ஜி.ஆர். வகுத்த கட்சியின் சட்டத்திட்ட விதியில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story