அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்
விழுப்புரம் அருகே போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அரசு ஆதிதிராவிட நலப்பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ப.வில்லியனூரில் அரசு ஆதிதிராவிட நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது இப்பள்ளியில் சுமார் 100 மாணவ- மாணவிகள்தான் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு ஆசிரியரும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு ஆசிரியரும் என மொத்தம் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை தலைமையாசிரியர் பணியிடமும் நிரப்பப்படவில்லை. தற்காலிக ஆசிரியர் பணியமர்த்தப்பட்டபோதிலும் அவர்களுக்கான ஊதியம் சரிவர வழங்கப்படாததால் அவர்கள் 3, 4 மாதங்களில் பணியை விட்டு சென்று விடுகின்றனர். இவ்வாறு ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் முற்றுகை
இதுகுறித்து மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பலமுறை, மாவட்ட கலெக்டர், அமைச்சர், சமூகநலத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று காலை அப்பள்ளிக்கு திரண்டு சென்று அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை உடனடியாக போக்க வேண்டுமென அவர்கள் கோஷமிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், அடிப்படை கல்வியைகூட முழுமையாக ஆதிதிராவிட மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்காததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே உடனே இப்பள்ளியில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.