மது குடிக்க பணம் கேட்டு மகன் தகராறு செய்ததால் பெற்றோர் தற்கொலை
தொடர்ந்து மகன் தகராறு செய்ததால் மனமுடைந்த பெற்றோர், விஷத்தை குடித்தனர்.
அரியலூர்,
அரியலூர் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி வளர்மதி (60). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உண்டு. இதில் மூத்த மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 2-வது மகன் இளமதி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இளமதியும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். மேலும் இளமதி அடிக்கடி மது அருந்துவதற்காக பணம் கேட்டு தனது தாய், தந்தையை மிரட்டி வந்துள்ளார். இதேபோல், நேற்று முன்தினம் இரவு மது குடிக்க பணம் கேட்டு தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த அவரது பெற்றோர், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே வளர்மதி பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் ராமசாமியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுகுடிப்பதற்காக மகன் பணம் கேட்டு தகராறு செய்ததால் மனமுடைந்து, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.