பராமரிப்பு இல்லாத பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பராமரிப்பு இல்லாத பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x

உடுமலை நகர பகுதியில் பராமரிப்பு இல்லாத பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

உடுமலை நகர பகுதியில் பராமரிப்பு இல்லாத பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டுகள்

உடலுக்கு வலிமை, உள்ளத்திற்கு உறுதி, தன்னம்பிக்கை, புத்துணர்வு அளிப்பது, உடற்பயிற்சியும், விளையாட்டுகளும் தான். கடந்த நூற்றாண்டின் இறுதி வரையிலும் தெருக்களில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடி வந்த நொண்டி, பச்சைக்குதிரை, கில்லி, கோ-கோ போன்றவை ஏட்டளவில் தான் உள்ளது. தினந்தோறும் மாலையில் குருவின் பார்வையில் நடைபெற்று வந்த யோகாசனம், சிலம்பம், கபடி, வாள்சண்டை, உடற்பயிற்சி இன்று அழிவின் விளிம்பில் உள்ளது.

விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்குள் ஏற்பட்ட ஒற்றுமை, சகோதரத்துவம், தனிமனித ஒழுக்கம், தலைமைப்பண்பு, விட்டுக்கொடுத்தல், பொதுநலன், சமூகம் சார்ந்த தொடர்பு கேள்விக்குறியாகி விட்டது. விளையாடும்போது மூச்சுக்குழாய் சுருங்கி விரிந்து உடலில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரித்து ஆரோக்கியத்தையும் வயதுக்கேற்ற வளர்ச்சியை அளித்தது. வியர்க்க விறுவிறுக்க ஓடியாடி விளையாட வேண்டிய சிறுவர்கள் இன்று ஒற்றைச் செல்போனில் அறைக்குள் முடங்கி உள்ளனர்.

செல்போனில் விளையாட்டு

வீதியில் விளையாடுவதை விட வீட்டுக்குள் செல்போனில் விளையாடும் பழக்கமே இன்று அதிகரித்து வருகிறது. இதனால் உடலும் உள்ளமும் வலுவிழந்து வருவதுடன் தன்னம்பிக்கை, கண்பார்வைஇழப்பு, விடாமுயற்சி, மன தைரியம் குழந்தைகள் மத்தியில் குறைந்து வருகிறது. ஆனால் தெருவில் இறங்கி விளையாடியது போது எந்த நோயும் குழந்தைகளை தாக்கவில்லை. இயற்கை அளிக்கும் எதிர்ப்பு சக்தி தானாகவே உடலுக்கு கிடைத்து வந்தது.

விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. இங்கு உற்சாகத்துடனும், ஆர்வத்தோடும் சிறுவர்கள் விளையாடினர். பின்னர் அதை முறையாக பராமரிப்பதற்கு சம்மந்தப்பட்ட நிர்வாகங்கள் முன்வரவில்லை. இதனால் உபகரணங்களைச் சுற்றி புதர்மண்டியதுடன் விஷ ஜந்துக்களின் புகலிட்டமாகிவிட்டது. இதனால் அங்கு விளையாடுவதை தவிர்க்கும் சூழலுக்கு சிறுவர்கள் தள்ளப்பட்டனர்.

புதர்மண்டிய பூங்கா

இதனால் பல ஆயிரங்கள் செலவில் அமைக்கப்பட்ட உபகரணங்கள் பழுதடைந்ததுடன், அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் நிதியும் வீணாகிறது. உடுமலை நகர்ப்புற பகுதியில் வீட்டுமனை இடங்கள் பிரிக்கப்பட்ட போது பூங்கா மற்றும் ரேஷன் கடை உள்ளிட்டவற்றுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவை ஒரு சில இடங்களில் மட்டும் கம்பிவேலி அமைத்து பராமரிப்பு செய்யப்பட்டது. அந்தவகையில் டி.ஆர்.என் கார்டன் பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு உபகரணங்களும் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு மேற்கொள்ளாததால் பழுதடைந்து வருகிறது. புதர்மண்டிய பூங்காவில் விளையாடி வரும் சிறுவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே பராமரிப்பு இல்லாத டி.ஆர்.என் கார்டன் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story