நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீட்டு குழுவை அமைத்தது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீட்டு குழுவை அமைத்தது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
x

நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தொகுதி பங்கீடு குறித்து பேச பேச்சுவார்த்தை குழுவை ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. கூட்டணி யார் யாருடன் என்ற பேச்சு பரவலாக தமிழகத்தில் கேட்க தொடங்கி இருக்கிறது. தி.மு.க. கூட்டணி, சட்டசபை தேர்தலை சந்தித்த அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போதைக்கு அந்த கூட்டணியில் இருந்து பாரிவேந்தரின் இந்திய தேசிய ஜனநாயக கட்சி மட்டுமே வெளியேறி இருக்கிறது. அதை ஈடுசெய்ய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த முறை போல தி.மு.க.வுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. ஆகியவை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் தொடருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச பேச்சுவார்த்தை குழுவை அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: சக்தி நடராஜன், சின்ராஜ் , நித்தியானந்தம் , சூர்யமூர்த்தி, அசோகன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story