கோவையில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கோவையில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2023 2:15 AM IST (Updated: 7 Oct 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போராடியவர்களை கைது செய்ததை கண்டித்து கோவையில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்

சென்னையில் போராடியவர்களை கைது செய்ததை கண்டித்து கோவையில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆசிரியர்கள் கைது

பணி நியமனம் மற்றும் மறு நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து கோவை மாவட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சத்திய குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பணி நிரந்தரம்

பின்னர் ஆசிரியர்கள் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 650 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் கோவையில் 400-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக சென்னையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மேலும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story