மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம்


மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம்
x
தினத்தந்தி 8 March 2024 11:57 PM GMT (Updated: 9 March 2024 1:34 AM GMT)

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதத்துடன் கூறினார்.

கோவை,

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 30-வது மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கார் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு வந்தார். அங்கு அவரை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். தொடர்ந்து அங்குள்ள சூரிய குண்டத்துக்கு தனது மனைவியுடன் சென்ற துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தீபம் ஏற்றி வழிபட்டார்.

அங்கிருந்து பேட்டரி காரில் புறப்பட்டு, நந்தி சிலையை வழிபட்டார். பின்னர் தியான லிங்க சன்னதிக்கு சென்று, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தியானம் செய்தார். விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசியதாவது:-

கோவை ஈஷா யோகா மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன்.

நம் பாரத கலாசாரத்தில் மகா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும், இங்கு நடத்தப்படும் மகா சிவராத்திரி விழாவானது தனித்துவமானது, ஈடு இணையற்றது.

மதம், மொழி, இனம், தேசம், கலாசாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. அத்துடன் கர்மா, பக்தி, ஞானம், க்ரியா என நான்கு மார்க்கங்களிலும் யோகா கற்று கொடுக்கப்படுகிறது.

ஜக்கி வாசுதேவ் யோகாவை உலகம் முழுவதும், பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று வருகிறார். மனித குல நல்வாழ்விற்காக அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றி பெற வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-

இன்று (நேற்று) நடைபெறும் மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் நடத்தப்படும் 30-வது மகா சிவராத்திரி விழாவாகும். 1994-ம் ஆண்டு நாம் நடத்திய மகா சிவராத்திரி விழா, வெறும் 70 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது.

அப்போது 75 வயது பாட்டி ஒருவர் இரண்டே பாடலை இரவும் முழுவதும் பாடி கொண்டேயிருப்பார். இருப்பினும் அவருடைய பக்தி மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது. கடந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை மட்டும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் கோள்களின் அமைப்பால், ஒருவரின் உயிர் சக்தியானது இயல்பாகவே மேல்நோக்கி செல்லும். எனவே இந்நாள் வெறும் விழிப்புடன் மட்டுமே இருக்கும் நாளாக இல்லாமல், நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விழிப்படைய செய்யும் நாளாகவும் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை ஜனாதிபதி மனைவி சுதேஷ் தன்கர், திரிபுரா கவர்னர் இந்திர சேனா ரெட்டி, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவானது நேற்று மாலை 6 மணி முதல் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரை கொண்டாடப்பட்டது. இதில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதையொட்டி ஈஷா யோகா மையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதிலும் பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.


Next Story