சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு


சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன், ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதார துறை அதிகாரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கோவை

சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன், ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதார துறை அதிகாரி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை

கோவையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவ தொடங்கியது. அதன்பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக பரவல் குறைந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளது.

இதற்கிடையில் சீனாவில் புதிய வகை கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில் கோவைக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகின்றனர். மேலும் சுழற்சி அடிப்படையில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. குறிப்பாக சீனா, வடகொரியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் ஆகிய 5 நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி மேற்கண்ட நாடுகளில் இருந்து கோவை விமான நிலையம் வழியாக வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா கூறியதாவது:-

ஆக்சிஜன் படுக்கைகள்

கோவையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கும், 2-வது டோஸ் தடுப்பூசி 96 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 14 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், 85 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி சீனா, தாய்லாந்து உள்பட 5 நாடுகளில் இருந்து கோவை விமான நிலைய வழியாக வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story