தொழிலாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கடும் சிரமம்


தொழிலாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கடும் சிரமம்
x

தொழிலாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கடும் சிரமம்

திருப்பூர்

திருப்பூர்,

கோவை-சேலம் இடையே பயணிகள் ரெயில் இந்த மாதம் இறுதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் காலை, மாலை நேரத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

கோவை-சேலம் பயணிகள் ரெயில் ரத்து

தொழில் நகரங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாநகரங்கள் விளங்கி வருகிறது. இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ரெயில் போக்குவரத்தை அதிகம் நம்பியுள்ளனர். ரெயில் கட்டணத்தை ஒப்பிடுகையில் பஸ்சில் பயண கட்டணம் அதிகமாக உள்ளதால் ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். சேலத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், கோவை நகரங்களுக்கும், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலத்துக்கும் தினமும் அலுவலக வேலைக்காகவும், கூலி தொழிலுக்காகவும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ரெயில் பயணத்தை நம்பி உள்ளனர்.

சீசன் டிக்கெட் உள்ளிட்ட கட்டண சலுகை காரணமாக பயணிகள் ரெயிலில் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக கோவையில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் தொழிலாளர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. கடந்த சில மாதமாக கோவை-சேலம் மெமு பயணிகள் ரெயில் அவ்வப்போது ரத்து செய்யப்படுவதால் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

பயணிகளுக்கு மிகுந்த சிரமம்

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

கோவையில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு செல்லும் மெமு ரெயில் கடந்த 6 மாதகாலமாக சரிவர இயக்கப்படுவதில்லை. அதுபோல் சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு கிளம்பி மாலை 5.15 மணிக்கு கோவை செல்லும் மெமு பயணிகள் ரெயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 28-ந் தேதி வரை கோவை-சேலம், சேலம்-கோவை மெமு ரெயில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலத்தை சேர்ந்த பயணிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

காலையில் கோவையில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயிலும் மார்ச் மாதம் 6-ந் தேதி வரை இருமார்க்கத்திலும் பகுதியளவு மட்டுமே இயக்கப்படுகிறது. அதாவது கோவை -விருதுநகர் இடையே ரெயில் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் கோவையில் இருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் சிங்காநல்லூர், சூலூர், இருகூரில் நிற்பதில்லை.பீளமேடு, வடகோவை மட்டுமே நிற்கிறது. மாலை 5 மணி ரெயிலை விட்டால் இரவு 9 மணிக்குத்தான் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளது. அதில் கட்டணம் அதிகம். காலை, மாலை நேரத்தில் பயணிகள் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தெழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறோம். தென்மாவட்டத்துக்கு செல்வதற்கு கோவை-நாகர்கோவில் இரவு நேர ரெயில் மட்டுமே உள்ளது. கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும். கோவை-சேலம் இடையே மெமு ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

-------


Next Story