நெல்லையில் ரெயில், பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


நெல்லையில் ரெயில், பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறை முடிந்து நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதற்காக ரெயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

திருநெல்வேலி

விடுமுறை முடிந்தது

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விஜயதசமி, தசரா உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறை தினங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர் வந்து பண்டிகைகளை கொண்டாடினார்கள்.

4 நாட்கள் விடுமுறை முடிந்து பணி செய்யும் நகரங்களுக்கு நேற்று திரும்பினார்கள். சென்னை, பெங்களூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் பணி செய்யும் மக்கள் ரெயில்கள், பஸ்களில் பயணம் செய்தனர்.

ரெயில் நிலையம்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ரெயில்களில் இடம் பிடிப்பதற்காக நீண்டநேரம் காத்திருந்து தங்களது பயணங்களை மேற்கொண்டனர்.

விடுமுறை தினங்களுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு இடங்கள் குறிப்பிட்ட நேரத்திலேயே முடிவடைந்த நிலையில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு பொதுமக்கள் இடங்களைப் பிடித்தனர்.

போதிய இருக்கை கிடைக்காததால் நின்று கொண்டும், கழிவறை அருகேயும், படிக்கட்டுகளிலும் அமர்ந்து கொண்டும், பொருட்கள் வைப்பதற்கான இருக்கையிலும் தரையில் அமர்ந்தவாறே தங்களது பயணம் செய்னர்.

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா முன்பதிவு இல்லா விரைவு ரெயிலில் இடம் பிடிப்பதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கட்டுங்கடங்காத கூட்டம் அலைமோதியது. நெல்லையில் இருந்தும் நெல்லை வழியாகவும் தசரா மற்றும் விடுமுறை கால 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட போதிலும் அந்த ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு இல்லா பெட்டியில் இடம் பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கான இருக்கைகளை பிடித்து பயணங்களை மேற்கொண்டனர்.

புதிய பஸ்நிலையம்

இதேபோல் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறினார்கள். இதையொட்டி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கினார்கள். இதனால் நெல்லை புதிய பஸ்நிலைய வளாகத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


Next Story