வெற்றி இலக்கை அடைய பாட்டாளி இளஞ்சிங்கங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: ராமதாஸ்


வெற்றி இலக்கை அடைய பாட்டாளி இளஞ்சிங்கங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: ராமதாஸ்
x

நாடாளுமன்றத்தில் நாம் எப்போதெல்லாம் வலிமையாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழ்நாடும் வலுவாக இருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே!

இந்தியாவை அடுத்து ஆட்சி செய்வது யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவிருக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டன. தேர்தலில் வெற்றிகளைக் குவிப்பதற்காக களத்தில் நீ கொடுக்கும் உழைப்பையும், நீ காட்டும் உறுதியையும் நினைத்து மனம் நெகிழ்ந்து போய், உன்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத்தான் இந்த மடலை நான் வரைகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்ட மக்களவைத் தேர்தல்களில் இருந்து இந்தத் தேர்தல் முற்றிலும் மாறானது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள்தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அதிமுகவையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம்.

1980ம் ஆண்டு வன்னியர் சங்கத்தைத் தொடங்கியதிலிருந்தே பாட்டாளிகளின் உழைப்பை நான் பார்த்து வருகிறேன். என்னுடன் களமிறங்கியவர்கள் அனைவரும் இப்போது 50 வயதையும், 60 வயதையும் கடந்தவர்களாகி விட்டனர். அவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறையினரான நீங்கள் களத்துக்கு வந்து விட்டனர். முந்தைய தலைமுறையினர் உடலால் தளர்ந்தாலும் மனதால் தளராமல் உங்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நாம் எப்போதெல்லாம் வலிமையாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழ்நாடும் வலுவாக உள்ளது. நாம் வலுவிழக்கும் போது தமிழ்நாடும் வலுவிழக்கிறது. கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்பது தான் இத்தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என நினைப்பதற்கு காரணம், வேறொருன்றுமில்லை.

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று இரு கட்சிகளும் மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக்கொள்கின்றன. ஆனால், அவர்களின் அடிமனதில் பா.ம.க., பாரதிய ஜனதா கூட்டணியைக் கண்டு பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். நமது கூட்டணி தமிழ்நாடு, புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு.

அந்த இலக்கை அடைவதற்காக இப்போது கடுமையாக உழைக்கும் பாட்டாளி இளஞ்சிங்கங்கள் அனைவரும் இனி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அதுதான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story