ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதி
கறம்பக்குடி பகுதியில் எல்லை ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
39 ஊராட்சிகள்
கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கறம்பக்குடியில் ஒரு தாலுகா மருத்துவமனையும், மழையூர், ரெகுநாதபுரம், பாப்பாபட்டி, குளந்திரான்பட்டு, கோட்டைக்காடு, வாணக்கன்காடு உள்ளிட்ட கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவு, தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கர்பிணிகளுக்கான தடுப்பூசி மற்றும் பேறுகால சிகிச்சைகளும், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.
எல்லை ஒதுக்கீட்டில் குளறுபடி
ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்த ஒவ்வொரு சுகாதார நிலையத்திற்கும் கிராம எல்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்தநிலையில், எல்லை ஒதுக்கீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தால் கடும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கிராமத்தின் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அந்த கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்காமல் 10 கிலோமீட்டர் தொடங்கி 15 கிலோ மீட்டர் வரையுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒதுக்கி உள்ளனர். இதனால் முதியோர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணிகளும், முதியோர்களும் தொடர் சிகிச்சைக்கு நெடுந்தொலைவுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே கறம்பக்குடி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் பயன்பாட்டிற்கான கிராமங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வேதனை
பாப்பாப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நடேசன்:- பாப்பாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. இங்கு சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கான தொடர் சிகிச்சைகளை நாங்கள் ரெகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பெற வேண்டிய நிலை உள்ளது. உள்ளூரிலேயே மருத்துவமனை இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் இருப்பது வேதனையாக உள்ளது. எனவே எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பாப்பட்டியில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோயாளிகள் அவதி
தனம்:- கறம்பக்குடி தாலுகாவில் பஸ் வசதி இல்லாத பல கிராமங்கள் உள்ளன. சிகிச்சைக்கு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லாமல் நீண்ட தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டி இருப்பதால் கர்ப்பிணிகள், நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள். கர்ப்பிணிகள் 2-வது மாதத்தில் கர்ப்பத்தை பதிவு செய்வது தொடங்கி தடுப்பூசி, ரத்த அழுத்த பரிசோதனை, பிரசவம், குழந்தைக்கான தடுப்பூசி என 2 ஆண்டுகள் தொடர் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இந்த எல்லை ஒதுக்கீடு குளறுபடியால் பெண்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
எனவே ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சுற்றி உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.