திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகள் -திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்; மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது - ஏராளமான பக்தர்கள் தரிசனம்


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று காலை திருக்கார்த்திகை தேரோட்டம் நடந்தது. மாலையில் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று காலை திருக்கார்த்திகை தேரோட்டம் நடந்தது. மாலையில் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருக்கார்த்திகை திருவிழா

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாளுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி பதினாறு கால் மண்டப வளாகத்தில் சிறிய தேரில், தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினார். இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு ரதவீதிகளில் தேர்வலம் வந்ததை கண்டு பக்தர்கள் தரிசித்தனர்.

3 கி.மீ. பக்தர் அங்கபிரதட்சணம்

திருப்பரங்குன்றம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் திருக்கார்த்திகையையொட்டி கிரிவலம் வந்தனர். இந்த நிலையில் 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் மதுரையை சேர்ந்த ஒரு பக்தர், அங்கப்பிரதட்சணம் செய்தார். தேேராட்டத்தையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மலையில் மகாதீபம்

நேற்று மாலையில் கார்த்திகை தீப திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தீபமேடையில் 3½ அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை வைக்கப்பட்டது. அதில் 300கிலோ நெய் நிரப்பப்பட்டது. 150 மீட்டர் கடாதுணியிலான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவையும் நிரப்பி தீபத்துக்காக தயார்படுத்தப்பட்டது.

கோவிலிலும், மலையிலும் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். கோவிலுக்குள் பெரிய மணி ஒலித்ததும் பாலதீபம் ஏற்றப்பட்டது. அதேவேளையில் மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. கொப்பரையில் சுடர்விட்ட தீபமானது அதிக உயரத்திற்கு ஜூவாலையாக பிரகாசித்தது. கண்கொள்ளா காட்சியாகயும் அமைந்து இருந்தது. மலையில் மகா தீபத்தை கண்டதும் கோவில் மற்றும் நகர பகுதியில் திரண்டு இருந்த பக்தர்கள் அரோகரா கோஷங்கள்எழுப்பி தீப தரிசனம் செய்தனர்.

சொக்கப்பனை

மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதும் வீடுகள், கடைவீதிகளில் அகல் விளக்குகளை மக்கள் ஏற்றினார்கள். மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சுவாமி-அம்பாள் புறப்பட்டு 16 கால் மண்டபம் அருகே சென்றனர். அங்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கப்பனை எரிந்த சாம்பலை வயலில் போடுவதற்காக போட்டிபோட்டு விவசாயிகள் எடுத்துச் சென்றனர்.

திருவிழாவின் மற்றும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இன்று (7-ந்தேதி) சரவண பொய்கையில் தீர்த்த உற்சவம் நடக்கிறது.


Next Story