முரண்பாடு கண்டறியப்பட்ட 60 நிறுவனங்களுக்கு அபராதம்


முரண்பாடு கண்டறியப்பட்ட 60 நிறுவனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 Aug 2023 6:45 PM GMT (Updated: 15 Aug 2023 6:46 PM GMT)

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முரண்பாடு கண்டறியப்பட்ட 60 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்

தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான நேற்று சுதந்திர தினத்தன்று விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து 111 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

60 நிறுவனங்களுக்கு அபராதம்

இந்த ஆய்வின்போது கடைகள், நிறுவனங்களில் 36 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 20 முரண்பாடுகளும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் ஆக மொத்தம் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள் மீது இணக்க கட்டண அபராதம் விதித்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் சுதந்திர தினத்தன்று விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சிகள், நகராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டு, அனைத்து வகையான தொழில்களில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளர் இளம் பருவத்தினரை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர். அதோடு அரசு மூலம் அறிவிக்கும் பணி ஒப்பந்தங்களில் "குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் எந்தவிதமான பணிகளிலும் பணியமர்த்தப்படவில்லை" என ஒப்பந்ததாரர்களிடமிருந்து சுயசான்று பெற வேண்டும் என்ற தீர்மானம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது என விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தன் தெரிவித்தார்.


Next Story