கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்


கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்
x

பெரம்பலூர் நகராட்சியில் டெண்டர் விடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

நகர்மன்ற கூட்டம்

பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்ற கூட்டம் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) ராதா, துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை குறித்து பேசினர். கூட்டத்தில் 21-வது வார்டு கவுன்சிலர் பழனிசாமி பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சியில் உள்ள அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். அப்போது தான் வார்டில் உள்ள கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரியப்படுத்த முடியும். வார்டுகளில் டெண்டர் விடப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இல்லையெனில் அந்த டெண்டரை நிறுத்தி விட்டு, புதிதாக டெண்டர் விட வேண்டும் என்றார்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

10-வது வார்டு கவுன்சிலர் மணிவேல் பேசுகையில், தார் சாலை சீரமைப்பு பணிகளை தரமாக செய்திட வேண்டும் என்றார். 14-வது வார்டு கவுன்சிலர் ரஹ்மத்துல்லா பேசுகையில், வார்டில் தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றார். 16-வது வார்டு கவுன்சிலர் தனமணி பேசுகையில், வார்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். 13-வது வார்டு கவுன்சிலர் நல்லுசாமி பேசுகையில், தனது வார்டில் சிமெண்டு சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றார்.

19-வது வார்டு கவுன்சிலர் சித்ரா பேசுகையில், வார்டில் சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க வேண்டும். சுகாதார வளாகங்களுக்கு பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமாக வழங்க வேண்டும் என்றார். 9-வது வார்டு கவுன்சிலர் ஷாலினி பேசுகையில், வார்டில் முறையாக குப்பைகளை அள்ள வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என்றார். 17-வது வார்டு கவுன்சிலர் அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தெரு நாய்களை பிடித்து, அதற்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

38 பணிகளுக்கு ஒப்புதல்

15-வது வார்டு கவுன்சிலர் சிவக்குமார் பேசுகையில், பெரம்பலூர் பழைய பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக புதிதாக அரசு அலுவலகங்கள் கொண்டு வரக்கூடாது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை நகராட்சி நிர்வாகம் பராமரிக்க கூடாது. நகராட்சிக்கு வருவாயை பெருக்கி வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவரும், ஆணையரும் தெரிவித்தனர். கூட்டத்தில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.79.33 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் வினியோக குழாய்கள் அமைக்கும் பணிகள் ஒப்புதல் பெறப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தார் சாலைகளை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.178 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது என்பது உள்ளிட்ட 38 பணிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் 2 தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.


Next Story