மின்இணைப்புடன் ஆதாரை இணைக்க பொதுமக்கள் அவதி
மின்இணைப்புடன் ஆதாரை இணைக்க பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக ராமேசுவரம் மின்வாரிய அலுவலகத்தில் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் வரிசையில் நின்று இணைத்து செல்கின்றனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக பி.எஸ்.என்.எல். நெட்சேவை செயல்பட வில்லை. இதனால் ராமேசுவரம் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க வரும் பொதுமக்கள் நெட் சேவை செயல்படாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பொதுமக்கள் அலைந்து கஷ்டப்படுவதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் அலுவலகத்தில் ஆதார் எண்ணை இணைக்க வரும் பொதுமக்களின் ஆதார் எண் மற்றும் மின் இணைப்பு எண்ணையும் பெற்றுக்கொண்டு எழுதி வைத்து பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து ராமேசுவரம் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியில் மட்டும் மொத்தம் 24,850 மின் இணைப்புகள் உள்ளன. கடந்த 4 நாட்களில் மட்டும் 2,200 மின் இணைப்புகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் ராமேசுவரம் மின்வாரிய அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பால் பொதுமக்கள் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் பொதுமக்களும் மற்றும் மின்வாரிய அதிகாரிகளும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.