குளத்தை முறையாக தூர்வாரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


குளத்தை முறையாக தூர்வாரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
x

திருக்கோகர்ணத்தில் உள்ள குளத்தை முறையாக தூர்வாரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

உண்ணாவிரதம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிரகதாம்பாள் கோவிலுக்கு அருகே பெரிய குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தை தூர்வாரி தடுப்பு சுவா் அமைக்கும் பணி ரூ.88½ லட்சத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குளம் முறையாக தூர்வாரப்படாமல் பணிகள் நடைபெற்று வருவதாகவும், குளத்தை முறையாக தூர்வார வேண்டும், குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், படித்துறையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சார்பில் திருக்கோகர்ணத்தில் அந்த குளம் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அமைதி பேச்சுவார்த்தை

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த சிலர் குளத்தில் குதித்து நீச்சலடித்து குளத்தின் மையப்பகுதியில் உள்ள கல்தூண் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

மேலும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதேபோல் உண்ணாவிரதத்தையும் மாலை 3 மணியளவில் முடித்துக்கொண்டனர்.


Next Story