நெரூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
100 நாள் வேலை திட்ட பொறுப்பாளரை மாற்றக்கோரி நெரூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பொறுப்பாளர் நியமனம்
கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகம் ஊராட்சி ரெங்கநாதன்பேட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பொறுப்பாளராக விமலா என்பவர் பணிபுரிந்து வந்தார். அப்போது 100 நாள் அட்டைகள் வழங்குவதில்லை குளறுப்படி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.
இவருக்கு பதிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பொறுப்பாளராக கீதா என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கீதா பணியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அப்பணியிடத்தில் விமலாவை நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது.
போராட்டம்
இதையடுத்து ரெங்கநாதன்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நெரூர் தென்பாகம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விமலா பொறுப்பாளராக நியமனம் செய்யமாட்டார் என உறுதியளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.