சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Oct 2023 8:45 PM GMT (Updated: 4 Oct 2023 8:46 PM GMT)

பொன்னாயூரில் சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொன்னாயூரில் சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லுத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாயூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு தற்போது 10 நாட்களுக்கு ஒரு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று பாலக்காடு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் பொதுமக்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தீர்வு காண வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்குவதற்கு பணம் செலுத்தி ஒராண்டுக்கு மேலாகியும் இதுவரைக்கும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. 3 நாட்களுக்கு ஒரு முறை வந்த குடிநீர் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. பாலக்காடு ரோட்டில் அகலப்படுத்தும் பணி மேற்கொள்வதற்கு முன்பு வரை தண்ணீர் ஒழுங்காக வந்தது. பணிகள் நடந்த பிறகு சரிவர குடிநீர் வினியோகம் செய்வதில்லை. எனவே குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர்.


Next Story